ரவி மோகன் நடித்த படங்களை தயாரித்ததால் ரூ.100 கோடி நஷ்டம்
ரவி மோகன் நடித்த படங்களை தயாரித்ததால் ரூ.100 கோடி நஷ்டம்
ADDED : மே 18, 2025 03:19 AM

சென்னை: நடிகர் ரவி மோகனை வைத்து படங்கள் தயாரித்ததால், 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக, அவரது மாமியார் சுஜாதா கூறியுள்ளார்.
மனைவி ஆர்த்தியை பிரிந்து, பாடகி கெனிஷாவுடன் பழகி வரும் நடிகர் ரவி மோகன், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், என்னை தங்க முட்டையிடும் வாத்தாக பயன்படுத்தினர்' என்று புகார் கூறயிருந்தார்.
அதற்கு பதிலளித்து, ரவி மோகனின் மாமியாரும், திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த, 2007ல், 'வீராப்பு' படத்தை தயாரித்தேன்; வெற்றியை கொடுத்தது. அதன்பின், 'டிவி'யில் மட்டுமே கவனம் செலுத்தினேன். 2017ல் ரவி மோகன், படம் தயாரிக்க வேண்டும் என்றார். அந்தாண்டு, ரவி மோகன் நடிக்க, நான் தயாரித்த, 'அடங்கமறு' படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ரவி மோகன் வற்புறுத்தியதால் தொடர்ந்து படம் தயாரித்தேன்.
'அடங்கமறு, பூமி, சைரன்' என, மூன்று படங்கள், ரவி மோகனை வைத்து தயாரித்தேன். மூன்றும் தோல்வியடைந்தன. இதற்காக, 100 கோடி ரூபாய் கடன் வாங்கினேன். அதில், 25 சதவீதத்தை, ரவி மோகனுக்கு சம்பளமாக வழங்கினேன். இதற்கான அனைத்து ஆதாரமும் உள்ளது.
இப்போது, என் கடனுக்காக நான் அவரை பொறுப்பேற்க சொன்னதாக புகார் கூறுகிறார். அதில், உண்மையில்லை. நான் அவரை நாயகன், மாப்பிள்ளையாக மட்டுமின்றி, என் மகனாகவே பார்த்தேன். பல கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மன உளைச்சலை நான் மட்டுமே ஏற்றேன்.
படம் தோல்வியடைந்ததும், அடுத்த படம் நடித்து தருவதாக மட்டுமே, ரவி மோகன் கூறினார். ஆனால், கடனுக்கு பொறுப்பேற்கவில்லை. அவர் கூறியபடி, கடனுக்காக அவரை பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை அவர் காட்டட்டும்.
இன்றுவரை அவரை நாயகனாக மட்டுமே பார்க்கிறோம்; ரசிக்கிறோம். இது நீங்கள் எப்போதும் அழைக்கும், இந்த அம்மாவின் ஆசை. என் பேரக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, என் மகளும், மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும். என் மீது மாமியார் சித்ரவதை என்ற குற்றச்சாட்டை சுமத்தாதீர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.