ADDED : நவ 24, 2026 03:47 AM

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி, 50, பெரம்பலுார் கலெக்டர் அப்துல் ராசிக்கிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: இயற்கை விவசாயம் செய்து வரும் எனக்கு ஆண்டு வருமானம், 75 ஆயிரம் ரூபாய். என் பெயர், ஆதார் எண், வங்கி ஆவணங்களை பயன்படுத்தி, பழைய இரும்பு, மரக்கட்டைகள் விற்பனை செய்யும் நிறுவனம், ஜி.எஸ்.டி., எண் பெற்றுள்ளது.
அந்த எண்ணை வைத்து, ஆகஸ்டில், 4.71 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்ததாகவும், போலி பில்கள் மூலம் உள்ளீட்டு வரி வரவு மோசடி செய்ததாகவும் வணிக வரித்துறை, என் மீது குற்றம் சாட்டியுள்ளது. அதற்காக, 1.70 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., அபராத தொகை செலுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
எனக்கும், அந்த நிறுவனத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. என் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி, மோசடி செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
