மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் ரூ.25 லட்சம் முறைகேடு
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் ரூ.25 லட்சம் முறைகேடு
ADDED : ஜூலை 26, 2025 04:46 AM
மதுரை: மதுரை மாநகராட்சி சொத்துவரி விதிப்பில் ரூ.25 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மாநகராட்சி சொத்து வரி நிர்ணய மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மாநகராட்சி கமிஷனர் 2024 செப்.,10 ல் புகார் அளித்தார். 2022 முதல் 2024 வரை மேயர் மற்றும் மண்டல தலைவர்களின் துாண்டுதலின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் மோசடியாக வணிக வரி விகிதத்தை வீட்டு வரியாக மாற்றியுள்ளனர். வணிக கட்டடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சிறு தொகையை வரியாக செலுத்த அனுமதித்துள்ளனர். இம்மோசடியால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புகார் அளித்த 8 மாதங்களுக்கு பின் வழக்கு பதிய மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு 2025 ஜூன் 17 ல் கமிஷனர் உத்தரவிட்டார். உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை. தமிழக முதல்வர் தலையிட்டு 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். 7 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜூலை 17 ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு : ஒரு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர் அமைக்க வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 25 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கே.மகேந்திரன் ஆஜரானார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், பிளீடர் திலக்குமார், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நகர் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி உட்பட 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.
11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் மாநகராட்சி அலுவலர்கள். 76 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 126 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோர்களில் 150 பேருடைய சொத்து வரி விதிப்பு எண் மூலம் ரூ.25 லட்சம் முறைகேடு நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு கூறி அறிக்கை தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள், 'விசாரணையின் தற்போதைய நிலை, அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அரசு தரப்பில் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.

