ADDED : ஏப் 08, 2025 03:53 AM

சிவகங்கை: சிவகங்கையில் கட்டு மான தொழிலாளர்கள் வீடு கட்ட முழு மானியமாக ரூ.4 லட்சம் பெறுவதற்கு, ரூ.4 ஆயிரம் கமிஷன் கொடுக்க வேண்டியதிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தொழிலாளர் நல ஆணையம் மூலம் கட்டுமான தொழிலாளர்களில், வீடற்ற, ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடு கட்டிக்கொள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் நபருக்கு ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தொழிலாளரிடம் வாரிய அட்டை, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொந்த பெயரில் பட்டா இருத்தல் வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியில் இருந்து இவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
கட்டாய வசூல்
இத்திட்டத்தில் வீடு கட்ட ரூ.4 லட்சம் பெற்றுத்தருவதாக கூறி கட்டுமான தொழிலாளர் சங்கம் பெயரில் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.2 ஆயிரம் சங்கத்திற்கும், ரூ.2 ஆயிரம் தொழிலாளர் நல அலுவலகத்திற்கும் வழங்க வேண்டும் என தெரிவிப்பதாக கூறுகின்றனர். வாரியம் மூலம் பெறும் ரூ.4 லட்சத்திற்காக கமிஷன் வசூலிக்கும் சங்கங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் குமுறினர்.
சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் சதீஷ்குமார் கூறியதாவது:
ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்தால் போதும். இதற்காக யாரிடமும் பணம் கொடுக்க தேவை இல்லை. பயனாளிக்கு வேறு எங்கும் வீடுகள், சொத்துக்கள், நிலம் இருக்கக்கூடாது.
வீடு கட்ட ரூ.4 லட்சம் பெற தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்பே தொகை வழங்கப்படும். எனவே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கம்ப்யூட்டர் சென்டர், சங்கங்கள் போன்றவற்றில் யாரிடமும் கமிஷன் வழங்க தேவையில்லை. பணம்கேட்டால் நேரடியாகபுகார் தெரிவிக்கலாம், என்றார்.