ரூ.5 கோடி லஞ்சம் கைமாறிய புகார் இன்ஸ்., வீட்டில் சி.பி.சி.ஐ.டி., ரெய்டு
ரூ.5 கோடி லஞ்சம் கைமாறிய புகார் இன்ஸ்., வீட்டில் சி.பி.சி.ஐ.டி., ரெய்டு
UPDATED : அக் 09, 2026 10:02 PM
ADDED : அக் 09, 2026 07:47 PM

தஞ்சாவூர்: தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் பிரச்னையில், போலீஸ் உயர் அதிகாரிகள், 5 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரால், இன்ஸ்பெக்டர் வீட்டில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று ஆறு மணிநேரம் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர், ரகுமான் நகரை சேர்ந்தவர் சரவணன், 37. இவர் பங்குதாரருடன் இணைந்து, ‘ஏ டு இசட்’ என்ற பெயரில், பல்நோக்கு மருத்துவமனை நடத்தி வருகிறார். அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.
சில மாதங்களுக்கு முன், பங்குதாரர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. சரவணன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி போலீஸ் மற்றும் மத்திய மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார். பங்குதாரர்களும், ஐ.ஜி., பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தனர்.
இதில், சரவணன், அவரது சித்தப்பாவும், மருத்துவமனை நிர்வாக தலைவருமான பாஸ்கரன், மேலாளர் பாஸ்கர் ஆகியோர் மீது எஸ்.சி., -– எஸ்.டி., வன்கொடுமை சட்டப்பிரிவு உட்பட மூன்று பிரிவுகளில் மருத்துவகல்லுாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரனை கைது செய்தனர்.
இந்நிலையில், ‘ஐ.ஜி., பாலகிருஷ்ணன, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தஞ்சாவூர் டி.எஸ்.பி.,யாக இருந்த ரத்தினகுமார், தெற்கு இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் மூலம், எங்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் போலீசார் செயல்பட்டனர். இதனால், வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என, தமிழக டி.ஜி.பி.,யிடம், சரவணன் மனு அளித்தார்.
இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சரவணனிடம், தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த வழக்கில், போலீசார் ஒருதலைபட்சமாக நடப்பதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என, 5 கோடி ரூபாய் வரை கேட்டதாகவும் தெரிவித்தார்.
இவற்றில், 3.75 கோடி ரூபாயை ரொக்கமாவும், 1.70 கோடி ரூபாயை காசோலையாகவும், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மூலம் வழங்கியதாக தெரிவித்தார். தொடர்ந்து, பங்குதாரர்கள் உள்ளிட்டோரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
அவரது இந்த லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக, விக்டோரியா நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் 10 பேர் கொண்ட குழுவினர், நேற்று ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு ஆவணங்கள், வீடியோ பதிவுகளை கைப்பற்றியதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.
