ரூ.50 கோடி மோசடி:மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்ட்;நிறுவன தலைவர் தேவநாதன் கைது
ரூ.50 கோடி மோசடி:மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்ட்;நிறுவன தலைவர் தேவநாதன் கைது
ADDED : ஆக 14, 2024 12:40 AM

சென்னை:மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில், 525 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதன் தலைவர் தேவநாதன், 62, கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில், 150 ஆண்டுகளாக, 'மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்டு' என்ற நிதி நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைவராக தேவநாதன் இருக்கிறார்.
12 சதவீதம் வட்டி
நிதி நிறுவனத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வுபெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்.
அவர்கள் தங்கள் சேமிப்பு மற்றும் ஓய்வூதிய பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
மூத்த குடிமக்கள் செய்யும் முதலீடு தொகைக்கு மாதம்தோறும், 10 - 12 சதவீதம் வட்டியாக தரப்படும் என, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, வட்டியும் கொடுத்து வந்துள்ளது.
காசோலைகள் திரும்பின
திடீரென முதலீட்டாளர்களுக்கு வட்டியும் தரவில்லை. முதலீட்டுக்கான முதிர்ச்சி காலம் முடிந்தும் பணத்தை திரும்ப தராமல், காசோலைகள் மட்டும் தந்துள்ளனர். அவையும் வங்கி இருப்பில் பணம் இல்லாமல் திரும்ப வந்து விட்டன.
இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சிஅடைந்து, நிதி நிறுவன நிர்வாகிகளிடம் கேட்ட போது மிரட்டப்பட்டு உள்ளனர். சமீபத்தில் நிதி நிறுவன அலுவலகம் முன், முதலீட்டாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, முதலீட்டாளர்களிடம் பெற்ற, 525 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டினர். அதன் தலைவராக உள்ள தேவநாதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், 140க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, 50 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டி
மோசடி வழக்கில் தேடப்பட்ட தேவநாதன், திருச்சியில் இருந்து காரில் காரைக்குடிக்கு செல்லும் போது, புதுக்கோட்டை அருகே கட்டியவயல் என்ற இடத்தில், தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சிக்கு அழைத்து சென்று விசாரித்த பின், சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
தொழில் வர்த்தகரான இவர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவராகவும் உள்ளார். லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.