கொடி நாள் நிதியாக ரூ.600 ஆர்.டி.ஓ., ஆபீஸ்களில் வசூல்
கொடி நாள் நிதியாக ரூ.600 ஆர்.டி.ஓ., ஆபீஸ்களில் வசூல்
ADDED : ஜன 02, 2025 11:07 PM
சென்னை:வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், கொடி நாள் நிதியாக, 600 ரூபாய் வசூலிப்பதாக, முதல்வர் தனிப்பிரிவில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில், புளிந்தோப்பை சேர்ந்த சரவணன் என்பவர் புகார் அளித்த பின் கூறியதாவது:
என் ஓட்டுனர் உரிமம் முடிந்து, மூன்று ஆண்டு களாகி விட்டது. அதை புதுப்பிக்க, புளிந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றேன். 'இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள்' என்று வாகன ஆய்வாளர் கேட்டார். உடல்நிலை சரியில்லாததால் வர முடியவில்லை என்றேன்.
பின், அபராத தொகையுடன், 1,850 ரூபாய் செலுத்தினேன். கொடி நாள் நிதியாக, 500 ரூபாய் செலுத்த சொன்னார். அந்த பிரிவுக்கு சென்ற போது, 100 ரூபாய் சேர்த்து 600 ரூபாய் கேட்டனர்; கொடுத்து விட்டு வந்தேன். மற்றவர்களிடம் கொடி நாள் நிதியாக, 100 ரூபாய் மட்டுமே பெறுகின்றனர். என்னிடம் 600 ரூபாய் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலக்கு ரூ.15 லட்சம்
இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், கொடி நாள் நிதியாக ஐந்து மாதங்களில், 15 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வருவோர்களிடம், அவர்களால் முடிந்த தொகையை செலுத்த அறிவுறுத்துகிறோம்.
நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. 100 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை செலுத்துகின்றனர்; அதற்கான ரசீதையும் தருகிறோம். கடந்த ஆண்டு 7 லட்சம் ரூபாயாக இருந்த இலக்கு, இந்த ஆண்டில், 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த பணத்தை இப்படி தான் வசூலித்தாக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.