உதயநிதிக்கு வாழ்த்து விளம்பரத்தால் சர்ச்சை கலெக்டர் பெயரில் ஆளும்கட்சியினர் சில்மிஷம்
உதயநிதிக்கு வாழ்த்து விளம்பரத்தால் சர்ச்சை கலெக்டர் பெயரில் ஆளும்கட்சியினர் சில்மிஷம்
ADDED : நவ 29, 2024 07:48 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பெயர், போட்டோ மற்றும் அதிகாரிகள் பெயர்களுடன் மாலை நாளிதழ் ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா வாழ்த்து, இரு நாட்களுக்கு முன் விளம்பரம் வெளியாகி உள்ளது. இது அதிகாரிகள் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, கடந்த 27ல் மாலை நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியானது.
அதில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா பெயர் மற்றும் அவரது போட்டோ, விராலிமலை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் உட்பட அரசு அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தபோது, 'புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் வடுகப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி சார்பில், உதயநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியான விளம்பரத்தில், அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படங்களோடு, மாவட்டக் கலெக்டர் அருணாவின் புகைப்படமும் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது.
அதிகாரிகள் சிலருடைய பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பான விசாரணை நடக்கிறது.
கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தபோது, ''அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவாக நடக்க வேண்டிய அதிகாரிகளின் பெயரையும், புகைப்படத்தையும் அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது போல விளம்பரம் வெளியிட்டால், அதிகாரிகள் அரசியல் சாயத்தோடு நடந்து கொள்வது போல ஆகிறது.
''எதிர்காலத்தில், வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தால், குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை, அக்கட்சியினர் பழிவாங்கக் கூடும். அதோடு, அரசு ஊழியர் நடத்தை விதிகள் படியும் இது தவறாகும்.
''இப்படியொரு நிகழ்வை அரசு ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்து விட்டால், எதிர்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தக் கூடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட தி.மு.க.,வினரோடு வம்புக்குச் சென்றால், ஆளும்கட்சிக்கு எதிரானவர்கள் என அரசு அதிகாரிகளுக்கு இப்போதே முத்திரை விழும். இதனால், கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என்ன செய்வது என புரியாமல் கடும் நெருக்கடியில் தவிக்கின்றனர்,'' என்றனர்.
இது பற்றி விளக்கம் கேட்க, மாவட்ட கலெக்டர் அருணாவை போனில் தொடர்பு கொண்டோம்.
போனை எடுத்து பேசிய கலெக்டரின் உதவியாளர், ''இப்படியொரு விளம்பரம் வெளியானது கலெக்டருக்கே தெரியாது. எவ்வித அனுமதியும் இன்றி, அவருடைய பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் தொடர்புடைய விளம்பரத்தில் பயன்படுத்தி உள்ளனர்.
''சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. இதனால், கலெக்டர் அருணா கடும் மன அழுத்தத்தில் உள்ளார்,'' என்றார்.

