மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மறுதினம் திறப்பு: பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தயார்
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மறுதினம் திறப்பு: பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தயார்
UPDATED : நவ 14, 2026 05:50 PM
ADDED : நவ 14, 2026 05:16 PM

சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மறுதினம் (நவ.17) மாலை திறக்கப்படுகிறது. திரண்டு வரும் பக்தர்களை எதிர்கொள்ள சபரிமலை, பம்பை, நிலக்கல் தயாராகிவிட்டது.
நாளை மறுதினம் மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக வந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து பின்னர் புதிய மேல் சாந்திகளான சபரிமலை - சுப்பிரமணியன் நம்பூதிரி, மாளிகைபுறம் - தாமோதரன் நம்பூதிரி ஆகியோரை சன்னிதானம் முன்புறம் அழைத்து வருவார். தொடர்ந்து தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் இருவருக்கும் அபிஷேகம் செய்து மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து முறைப்படி அவர்களை மேல் சாந்திகளாக பதவியேற்க செய்வார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை மறுநாள் (17-ம் தேதி) அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுப்பிரமணியன் நம்பூதிரி நடை திறந்து கோயிலுக்குள் தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடைபெற உள்ளது. அனைத்து நாட்களிலும் ஐயப்பனுக்கு களபாபிஷேகம் உண்டு. பக்தர்கள் படியேறுவதை ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதால், மண்டல காலத்தில் படி பூஜை கிடையாது. தினமும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 3:00 மணிக்கு நடை திறந்து இரவு 11:00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
இந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மண்டல காலத்துக்கு திரண்டு வரும் பக்தர்களை வரவேற்க சபரிமலை தயாராகிவிட்டது. குடிநீர்,கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகள் தயார்
சபரிமலையில் மழை பெய்து வருகிறது. சாலக்கயம் முதல் பம்பை வரையிலான நான்கரை கிலோமீட்டர் துார ரோடு சர்வதேச தரத்தில் ரூ.14.14 கோடியில் 12 மீட்டர் அகலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது . இதன் மூலம் பக்தர்களின் வாகனங்கள் பம்பையை நெருங்கும் போது ஏற்படும் நீண்ட வரிசை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலை முன்னேற்பாடுகளை அம்மாநில முதல்வர் சதீசன், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா, தேவசம்போர்டு அமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர் பலமுறை நேரில் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். இதற்காக திருவனந்தபுரம், நிலக்கல், பம்பை சன்னிதானம் ஆகிய இடங்களில் பல கட்டங்களாக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பம்பையில் பக்தர்கள் குளிக்கும் பகுதிகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
