அமைச்சர் பங்கேற்ற விழாவில் துாய்மை பணியாளர்கள் தவிப்பு
அமைச்சர் பங்கேற்ற விழாவில் துாய்மை பணியாளர்கள் தவிப்பு
ADDED : ஏப் 15, 2025 05:47 AM

ராமநாதபுரம்: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடந்த சமத்துவ நாள் விழாவில், அமைச்சர் ராஜகண்ணப்பன், தங்களை புறக்கணித்ததாக துாய்மை பணியாளர்கள் கூறினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள், சமத்துவ நாள் விழாவாக தனியார் மண்டபத்தில் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் வரவேற்றார். பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
விழாவிற்காக, ராமநாதபுரம் முழுதும், 11 ஒன்றியங்களில் இருந்து, துப்புரவு தொழிலாளர்கள், காலை 8:00 மணிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு குடிநீர், டீ, காபி எதுவும் வழங்கப்படவில்லை.
அமைச்சர், காலை 11:30 மணிக்கு வந்தார். அதன்பின், தாட்கோ வாயிலாக துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமபந்தி விருந்தில், முதல் பந்தியில் அமைச்சர், கலெக்டர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என, அனைவரும் உணவருந்தி சென்றனர். துாய்மை பணியாளர்கள், உணவிற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்து அவர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.