ADDED : ஜன 05, 2025 03:03 AM
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட காங்., நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ்ராஜப்பா, மண்டல தலைவர் ஜாபர்சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல். ஏ.,வாக இருந்த இளங்கோவன் மறைவுக்கு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
மாநில தலைமைக்கும், அகில இந்திய காங்., தலைமைக்கும் அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
இதுபற்றி முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:
மாநில காங்., சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இளங்கோவன் எம்.எல்.ஏ., ஆகியோர் மறைவுக்கு, வரும் 7ல் அஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில், முதல்வர் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
அங்கு, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியை மீண்டும் காங்., கட்சிக்கு ஒதுக்கி, சஞ்சய் சம்பத்துக்கு மீண்டும் வாய்ப்பு தர வலியுறுத்தும் வகையில், அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் அனுப்புகிறோம்.
இது இங்கிருக்கும் காங்கிரசார் மற்றும் மக்களின் விருப்பம். இதனால், இடைத்தேர்தலுக்கு காங்., சார்பில் சஞ்சய் சம்பத்தை நிறுத்த வேண்டும். இதை காங்., தலைமையும் ஏற்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு கூறினர்.

