ADDED : ஆக 09, 2026 02:24 AM

சென்னை: காசோலை மோசடி வழக்கில், நடிகரும் பா.ஜ., பிரமுகருமான சரத்குமார், செப்டம்பர், 10ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார், 2024ம் ஆண்டு தன் கட்சியை, பா.ஜ., வுடன் இணைத்தார்.
அவர் தன் கடன்களை அடைக்க, சென்னையைச் சேர்ந்த என்.ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம், 2025 ஏப்ரலில், 2 கோடி ரூபாய் கடன் பெற்றார்.
கடன் தொகையை திருப்பி செலுத்தும் வகையில், சரத்குமார் வழங்கிய காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதையடுத்து, சரத்குமாருக்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஸ்ரீகிருஷ்ணா சார்பில் வழக்கறிஞர் ஆர்.எஸ்.ரவீந்திரன், காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர், 10ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சரத்குமாருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
