ADDED : செப் 05, 2025 11:05 PM
திருப்பூர்; வேளாண் துறையில் மத்திய, மாநில அரசு திட்டங்களை முழுமைப் பெறாததால், அத்துறையில் பணிபுரிவோருக்கு சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவித்து, அந்தந்த மாவட்ட வேளாண் இணை இயக்குனர்கள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், விற்பனை வணிகம் மற்றும் விதை சான்றளிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன. இதில் வேளாண், தோட்டக்கலை துறைக்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மத்திய, மாநில அரசுகளின் கீழ், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
பொதுவாக, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களுக்கு, சனி, ஞாயிறு கிழமைகள் விடுமுறை தினம்.
இந்நிலையில், மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர்கள் சார்பில், வட்டார அளவில் செயல்படும் அனைத்து வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கும் அனுப்பப்படும் சுற்றிறிக்கையில், ''மத்திய மற்றும் மாநில திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, வரும், 6ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாள் எனவும், அன்றைய தினம், அனைத்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வேளாண்மை கிடங்குகள் பணி நாளாக கருதப்படும்' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேளாண் துறையினர் கூறுகையில், 'தோட்டக்கலை மற்றும் உழவர் நலத்துறையில் வேளாண் துறை மட்டுமின்றி, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், விதை சான்றளிப்பு, விற்பனை வணிகத்துறை என பல துறைகள் இருப்பினும், வேளாண் துறையினருக்கு மட்டும், சனிக்கிழமை பணிநாளாக அறிவித்து, கடந்த இரு வாரமாக சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது,' என்றனர்.