'மாணவர் மனசு' புகார் பெட்டி; பள்ளிக்கல்வித்துறை புது அறிவிப்பு
'மாணவர் மனசு' புகார் பெட்டி; பள்ளிக்கல்வித்துறை புது அறிவிப்பு
ADDED : நவ 13, 2024 11:47 AM

சென்னை; பள்ளிக்குழந்தைகள், மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;
பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர்களை NSS, NCC, Scout மற்றும் Guide, JRC போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் காரணமாக பள்ளியை விட்டு வெளியே மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ அழைத்துச் செல்ல நேரிடும் பொழுது ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பெற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன் பிறகு மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவ, மாணவியரை பள்ளியை விட்டு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
மேலும், மாணவ, மாணவியரை வெளியே அழைத்துச் செல்லும் பொழுது 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர். 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை உடன் செல்ல வேண்டும்.
மாணவர், மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. அதில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது; அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, புகார் தெரிவிக்க பாடநூல்களில் பின்புற அட்டைகளில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் (14417, 1098), பள்ளிகளில் மாணவர் மனசு புகார் பெட்டி ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.