பள்ளிகளில் இனி கடைசி 'பெஞ்ச்' கிடையாது 'ப' வடிவ வரிசையில் இருக்கைகள் மாற்றம்
பள்ளிகளில் இனி கடைசி 'பெஞ்ச்' கிடையாது 'ப' வடிவ வரிசையில் இருக்கைகள் மாற்றம்
UPDATED : ஜூலை 12, 2025 11:23 PM
ADDED : ஜூலை 12, 2025 11:20 PM

சென்னை:'அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில், வகுப்பறைகளில், 'ப' வடிவில் இருக்கை வரிசை அமைக்கப்பட வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் வெளியான ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படம், கடைசி இருக்கையில் அமர்வதால், கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து அம்மாநிலத்தில், 'ப' வடிவில் மாணவர்களின் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன.
சுற்றறிக்கை
தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் வாய்ப்பு உள்ள பள்ளிகளில், 'ப' வடிவில் இருக்கை வரிசையை மாற்றி அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வகுப்பறையில் வசதியான இருக்கை ஏற்பாடு, கற்றலை மேம்படுத்துவதிலும், மாணவர்களை ஆசிரியர் நன்கு தொடர்பு கொண்டு உரையாடுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதை கருத்தில் கொண்டு, 'ப' வடிவ இருக்கை வசதியை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.
இந்த அமைப்பில், ஒவ்வொரு மாணவரும், ஆசிரியர் மற்றும் கரும்பலகையை தெளிவாக பார்க்க முடியும். வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களையும், ஆசிரியர்கள் எளிதில் தொடர்புகொள்ள இயலும். மாணவர்களின் செயல்பாடுகளை, ஆசிரியர்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
இது தவிர, கலந்துரையாடல்கள், கேள்வி - பதில் அமர்வுகள், கருத்துகளை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றுக்கு, 'ப' வடிவ இருக்கை வசதி சமவாய்ப்பை வழங்குகிறது.
அதேபோல, தொழில்நுட்ப செயல்முறை விளக்கங்கள், குழு விவாதங்களுக்கும் இம்முறை மிகவும் உகந்ததாக இருக்கும்; மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சற்று வசதியாக அமையும்.
சிறந்த கற்றல்
இந்த இருக்கை வசதியின்படி, ஒவ்வொரு மாணவரும் முன்புற வரிசையில் இருப்பர். இதன் வாயிலாக, ஆசிரியர் பாடம் நடத்தும் போது, வகுப்பில் உள்ள எவரும் மறைக்கப்படாமல், சிறந்த கற்றல் நடப்பதை உறுதி செய்ய முடியும்.
குறிப்பாக, ஆசிரியரின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால், மாணவர்களுக்கு கற்றலில் கவனச்சிதறல் ஏற்படாது. பொதுவாக பாடப்பொருள் தொடர்பாக, ஆசிரியர்களிடம் சந்தேகங்கள் எழுப்பவும், கருத்து பரிமாற்றம் செய்யவும், சில மாணவர்கள் தயங்குவது வழக்கம்.
அவர்கள் இனி எவ்வித தயக்கமும் இல்லாமல், கற்றலில் ஆர்வத்துடன் பங்கேற்பர். எனவே, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறையின் அளவு அடிப்படையில், 'ப' வடிவ இருக்கை வசதியை அமைக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.