'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பரவுகிறது புதர்கள் பக்கம் செல்லாதீங்க!
'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பரவுகிறது புதர்கள் பக்கம் செல்லாதீங்க!
ADDED : ஜன 03, 2025 11:09 PM
சென்னை:தமிழகத்தில், 'ஸ்க்ரப் டைபஸ்' என்ற பாக்டீரியா தொற்றால், 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
'ஸ்க்ரப் டைபஸ்' என்பது, ஒரு வகையான பாக்டீரியா தொற்று. 'ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும் போது, அவர்களுக்கு, 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் ஏற்படுகிறது.
இதன் பாதிப்பு ஏற்பட்டோருக்கு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் போன்றவை, முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில், தற்போது அதிக அளவில் 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பரவி வருகிறது.
அதேபோல், கிழக்கு தொடர்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இந்த பாதிப்புகள் உள்ளன. இந்த ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலால், 2024ம் ஆண்டு முதல் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தினமும், 10 முதல், 20 பேர் வரை, பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணியர், பூச்சி கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போர், ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, புதர் மண்டிய இடங்களுக்கு, அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் கடித்தால், அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

