சிற்ப கலைஞர்கள் விருது அமைச்சரால் தாமதம் என புகார்
சிற்ப கலைஞர்கள் விருது அமைச்சரால் தாமதம் என புகார்
ADDED : ஜூன் 19, 2025 11:00 PM
சென்னை:தமிழக கலை பண்பாட்டுத் துறை சார்பில், ஓவியர்கள், சிற்ப கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகள், துறை அமைச்சர் சாமிநாதனால் தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், தமிழகத்தை சேர்ந்த மரபுவழி, நவீனபாணி ஓவியர்கள் மற்றும் சிற்ப கலைஞர்கள் ஆறு பேருக்கு, ஆண்டுதோறும் கலைச்செம்மல் விருது, தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள், இன்னும் வழங்கப்படவில்லை.
இது குறித்து சிற்பக் கலைஞர்கள் கூறியதாவது:
தமிழக கலை பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும், கலைச்செம்மல் விருதுகள் இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டால், அமைச்சர் தேதி கிடைக்கவில்லை என்கின்றனர். அதேபோல், ஆண்டுதோறும் சிறந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை பெற்று, ஓவிய சந்தை என்ற பெயரில் பொதுமக்களுக்கான கண்காட்சியை கலை பண்பாட்டுத் துறை நடத்தும். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி குறித்து இதுவரை தகவல் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.