பயங்கரவாதிகள் நடமாட்டம்; தேனி, திண்டுக்கலில் தேடல்
பயங்கரவாதிகள் நடமாட்டம்; தேனி, திண்டுக்கலில் தேடல்
ADDED : ஆக 19, 2025 05:50 AM
சென்னை: கோவை தொடர் குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பதுங்கியிருந்த, கோவை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் முகமது அலி, அபுபக்கர் சித்திக், டெய்லர் ராஜா ஆகியோர், ஏ.டி.எஸ்., எனப்படும் தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை காவலில் எடுத்தும் விசாரித்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர். அப்போது, இவர்கள் தலைமறைவாக இருந்த ஆண்டு களில், வெடிகுண்டு தயா ரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றது தெரியவந்தது.
கோவை தொடர் குண்டு வெடிப்பு மற்றும் ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முகமது அலி, சித்திக் உள்ளிட்டோரின் கூட்டாளிகள் எட்டு பேர் குறித்த தகவல்களும் தெரியவந்தன.
இதையடுத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், தலைமறைவாக உள்ள பயங்கரவாதிகள், கோவை போத்தனுாரைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், வாணியம்பாடி முஸ்டாக் அகமது, கோவை குனியமுத்துாரைச் சேர்ந்த அஷ்ரப் அலி உள்ளிட்ட எட்டு பேரை தேடி வருகின்றனர்.
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், அவர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த மாவட்டங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.