பங்கு உரிமையை வாரிசுக்கு மாற்றும் போது இனி வரி உள்ளிட்ட சிக்கல்கள் இருக்காது நியமனதாரர்களுக்கு ஆறுதல் தந்த செபி அறிவிப்பு
பங்கு உரிமையை வாரிசுக்கு மாற்றும் போது இனி வரி உள்ளிட்ட சிக்கல்கள் இருக்காது நியமனதாரர்களுக்கு ஆறுதல் தந்த செபி அறிவிப்பு
ADDED : செப் 20, 2025 11:31 PM

மும்பை:பங்குகளின் உரிமையாளர் மறைவுக்குப் பிறகு, நியமனதாரர் அந்த பங்குகளை உரிமையாளரின் சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றுவதில் புதிய நடைமுறையை, செபி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டெபாசிட்டரிகள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பதிவாளர் மற்றும் மாறுதல் முகவர், டெபாசிட்டரி பார்ட்டிசிபன்ட் ஆகியோருக்கு செபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
பங்குகளின் உரிமையாளர் மறைவுக்குப் பிறகு, நியமனதாரர் சட்டப்பூர்வ வாரிசுக்கு பெயர் மாற்றம் செய்யும் போது, ஆவணங்களில் புதிய குறியீடாக டி.எச்.எப்., என குறிப்பிட வேண்டும். 'டிரான்ஸ்மிஷன் டூ லீகல் ஹயர்' என்பதை குறிப்பிடும் இந்த குறியீட்டை, பங்கு பெயர் மாற்றம் தொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இப்போது உள்ள நடைமுறையில், நியமனதாரரிடம் இருந்து சட்டப்பூர்வ வாரிசுக்கு பங்குகள் பெயர் மாற்றம் செய்யப்படும்போது, டிரான்ஸ்பர், அதாவது மாற்றம் என்ற அடிப்படையில் குறிப்பிடப்படுவதால், அது நீண்ட கால முதலீட்டு ஆதாய வரியின் கீழ் வருகிறது.
வாரிசுக்கு பங்குகளை மாற்றுவதை வருமான வரிச் சட்டம் 4 (3) விலக்கு அளித்துள்ள போதிலும், பங்கு மாற்றம் என்று பதிவு செய்யப்படுவதால் தவறு நேர்ந்து, முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டியுள்ளது. பிறகு, ரீபண்டு கேட்டு விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால் தேவையற்ற அசவுகரியங்கள் ஏற்படுகின்றன.
இதை தவிர்ப்பதற்காகவே, இனி பங்கு உரிமை மாற்றத்தின்போது டி.எல்.எச்., என்று குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து செபியின் செயல்பாட்டு குழு, மத்திய நேரடி வரிகள் வாரியமான சி.பி.டி.டி.,யிடம் ஆலோசித்து, இந்த பரிந்துரையை செயல்படுத்த அனுமதி பெற்றுள்ளது.
நியமனதாரர் டிரஸ்டியாக செயல்படவும், சட்டப்பூர்வ வாரிசுக்கு பங்குகளின் உரிமையை மாற்றித் தரவும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. புதிய நடைமுறையால், தேவையற்ற வரி சிக்கல்கள் தவிர்க்கப்படும் என்றும் செபி தெரிவித்துள்ளது.