ரஜினியுடன் சீமான் திடீர் சந்திப்பு விஜய்க்கு வேகத்தடை போட திட்டம்
ரஜினியுடன் சீமான் திடீர் சந்திப்பு விஜய்க்கு வேகத்தடை போட திட்டம்
ADDED : நவ 23, 2024 02:45 AM
நடிகர் ரஜினியை அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
எடுத்ததுமே, தனக்கு எதிராக தன் கட்சியினரையே கொம்பு சீவி விடும் வேலையில் தி.மு.க., களம் இறங்கி இருப்பது குறித்த தன்னுடைய ஆதங்கத்தை ரஜினியிடம் கொட்டி உள்ளார் சீமான்.
'எனக்கு எதிராக என்னுடைய பெயரை கெடுக்கச் சொல்லி நேற்று வரை நாம் தமிழரில் தம்பிகளாக இருந்தவர்களெல்லாம் என்னை வசைபாடுகின்றனர்' என ரஜினியிடம் சீமான் வருத்தப்பட்டு கூறியுள்ளார். விஜயை சொந்த தம்பி போல பாவித்தேன். அவர் கட்சி துவக்கிய பின் என்னை எதிரியாக பார்க்கிறார். என்னோடு அரசியலில் இணக்கமாக இருந்து செயல்பட்டால், எனக்கு எதிரான ஓட்டுகள் தனக்கு வராது என்று நினைத்தே, என்னுடைய கட்சியினரையே தன் பக்கம் வளைக்க முயல்கிறார். அதை அறிந்த பின் தான், நடிகர் விஜயையும், அவருடைய கட்சிக் கொள்கையையும் விமர்சித்து பேச வேண்டியதாகி விட்டது.
2026 சட்டசபைத் தேர்தலில் எப்படியும் தி.மு.க.,வை வீழ்த்தியாக வேண்டும். அதனால், தனித்து மட்டுமே களம் காணுவது என்கிற முடிவை சற்று தளர்த்தி வரும் தேர்தலில், என் தலைமையில் கூட்டணி ஏற்படுத்தலாமா என யோசிக்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய, பா.ஜ., தலைவர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர். என்னை முதல்வர் வேட்பாளராக பா.ஜ., தரப்பில் அறிவிக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவும் வேண்டும்' என, ரஜினியிடம் சீமான் கூறியிருக்கிறார். அதற்கு ரஜினி நான் எந்த முடிவும் சொல்ல முடியாது என கூறியுள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறின.
எங்கள் ஸ்லீப்பர் செல்கள்
சந்திப்பு குறித்து, சீமான் அளித்த பேட்டி:
மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். திரையுலகம், அரசியல் என பல விஷயங்களையும் பேசினேன். தமிழக ஆட்சியாளர்கள் தங்களுக்கு தாங்களே நற்சான்றிதழ் கொடுத்துக் கொள்கின்றனர். நல்ல ஆட்சி நடத்தினால், ஓட்டுக்கு காசு கொடுத்து, ஏன் மக்களை விலை பேச வேண்டும்.
அரசியல் சிஸ்டமே தவறாக இருப்பதால் தான், அதை மாற்ற வேண்டும் என, ரஜினி கூறினார். இதைத் தான் நானும் சொல்லி வருகிறேன். அமைப்பு ரீதியில் தவறு இருக்கிறது என நான், தமிழில் சொல்கிறேன். இந்த சிஸ்டத்தில் இருக்கும் தவறை எப்படி களைய வேண்டும் என்பது குறித்து தான், ரஜினியை சந்தித்துப் பேசினேன்.
சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று பொருள். சங் பரிவாரிலிருந்து சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையான சங்கி யார் தெரியுமா. எங்களை சங்கி என்று சொல்பவர்கள் தான்.
பிரதமரை காலையில் மகனும், மாலையில் அப்பாவும் சந்திக்கின்றனர். எதற்கு சந்தித்தோம் என்பதை, இது வரை சொல்லவில்லை. ஆனால், ரஜினியை ஒளிவு மறைவின்றிதான் நான் சந்திக்கிறேன். அதை வெளியிலும் சொல்கிறேன். ஏனென்றால், இதில் கள்ளத்தனம் இல்லை.
எங்கள் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் விலகுவது குறித்துக் கேட்கின்றனர். அவர்களை மாற்றுக் கட்சிக்கு அனுப்பி வைத்திருப்பதே, நாங்கள் தான். வெவ்வேறு இயக்கங்களுக்குச் சென்று, எங்களுக்காக அவர்கள் உளவு பார்த்து தகவல் சொல்வர். அதாவது எங்களுடைய 'ஸ்லீப்பர் செல்'கள்.
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -