திருப்பதிக்கு நிகராக பழனி பா.ஜ.,வுக்கு சேகர்பாபு பதில்
திருப்பதிக்கு நிகராக பழனி பா.ஜ.,வுக்கு சேகர்பாபு பதில்
ADDED : பிப் 12, 2025 10:29 PM
சென்னை:வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
பழனி முருகன் கோவிலில் அடிப்படை வசதி இல்லை என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். ஆனால், பக்தராக காவடி எடுத்துச் சென்று, முருகனை தரிச்சித்துள்ளார். அவர் ஏற்கனவே, 48 நாட்கள் செருப்பு அணிய மாட்டேன் என, நேர்த்திக் கடன் செலுத்தி உள்ளார்.
ஆன்மிகத்தோடு சம்பந்தப்படுத்தி, அரசியல் ரீதியாக சொன்ன பதிலுக்கு, நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார். இந்த ஆட்சியில்தான் பழனியில் குடமுழுக்கு நடந்துள்ளது. அங்கு, 98 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் நடக்கிறது.
கடந்த 2010ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, 58 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டார். அதன்பின் வந்த, 10 ஆண்டு கால ஆட்சியில், அரசாணை துாக்கத்தில் இருந்தது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அரசாணையை செயல்படுத்தி கருவூலத்திற்கு, 58 கோடி ரூபாய் செலுத்தி, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பதிக்கு நிகராக பழனி இல்லை என்றால், நீங்கள் என்ன கூறினாலும் ஏற்றுக்கொள்கிறேன். பழனியில் ஒரு நாளில், 20,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தைப்பூச நாளில், பழனியில் 60 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல், முருகனை தரிசித்து திரும்பி உள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. தேர்லுக்கு 14 மாதங்கள் உள்ளன. தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தமிழகத்தில் 20 சதவீதம் ஓட்டுகள் உள்ளது என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தேர்தல் களத்தில் நிற்பவர்கள் எல்லாம், 100 சதவீதம் ஓட்டு எங்களுக்குதான் என தேர்தல் களத்திற்கு வருவர். இறுதி தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

