ADDED : அக் 10, 2024 12:35 AM
சென்னை:எரிசக்தி துறை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை மின் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் நடந்தது. மின் வாரிய தலைவர் நந்தகுமார் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளதாவது:
இதுவரை அறிவிக்கப்பட்ட, 108 அறிவிப்புகளில், 1.50 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்குதல், ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீவில்லிப்புத்துார், கரூர், சுசீந்திரம் கோவில்களின் ரத வீதிகளில், மின் கம்பிகளை தரைக்கு அடியில் மாற்றி அமைத்தல் உட்பட, 34 அறிவிப்புகள் முழுதுமாக செயல்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும், 64 அறிவிப்புகளுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் துரிதமாக நடந்து வருகின்றன.
பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் மின் சாதனங்கைளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
அனைத்து பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு, குறித்த காலத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின் தடையின் போது, அது தொடர்பான நேரம் குறித்து நுகர்வோர்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும், பத்திரிக்கை செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

