பூமிக்கடியில் மின் கேபிள்கள் புதைக்கும் பணி துவக்கம்; செந்தில் பாலாஜி தகவல்
பூமிக்கடியில் மின் கேபிள்கள் புதைக்கும் பணி துவக்கம்; செந்தில் பாலாஜி தகவல்
ADDED : டிச 10, 2024 02:58 AM
சென்னை : சென்னையில் ஏழு மின் கோட்டங்களில், பூமிக்கடியில் மின் கேபிள்கள் புதைப்பதற்கான பணி துவங்கி உள்ளதாக, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சுதர்சனம்: மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பாடியநல்லுார் ஊராட்சியில், 50 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதில், 110 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் நில பரிமாற்றம் செய்ய கோரியது.
அந்த நிலம், மேய்க்கால் நிலம் என்பதால், அதற்கு சமமான நிலம் பொன்னேரி அடுத்த கோளூரில் தேர்வு செய்யப்பட்டது. நில மதிப்பீடு மற்றும் புல தணிக்கை செய்து, 2021ம் ஆண்டு நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டது; இன்னும் நிலம் மாற்றம் செய்யப்படவில்லை. அப்பகுதி மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க, துணை மின் நிலையம் விரைவாக அமைக்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: சென்னையில் பெரம்பூர், ஆவடி, அடையாறு, ஐ.டி., காரிடர் மற்றும் தாம்பரம் ஆகிய, ஐந்து மின் கோட்டங்களில் உள்ள பகுதிகளில், மேல்நிலை மின் கம்பிகளை பூமிக்கடியில் கேபிள்களாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
மீதமுள்ள ஏழு மின் கோட்டங்களில், பூமிக்கடியில் கேபிள் புதைப்பதற்காக, ஒப்பந்தம் கோரும் பணிகள் நடக்கின்றன. மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளும் அதில் இடம் பெற்றுள்ளன.
மாதவரம் சட்டசபை தொகுதியில், நான்கு துணை மின் நிலையங்கள் அமைக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதில், மூன்று துணை மின் நிலையங்களுக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்படைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் இருக்கக்கூடிய ஒரு துணை மின் நிலையத்திற்கு இடம் தேர்வு நடக்கிறது. முன்னுரிமை அடிப்படையில், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

