ADDED : ஜன 03, 2024 11:48 PM
சென்னை:போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்று ஏமாற்றியதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப் பத்திரிகையில், 900 பேர் வரை, குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், 2011 - 16ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார்.
போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்று மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., நான்கு வழக்குகள் பதிவு செய்தன.
இறுதி@@
அதில் ஒரு வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மற்ற வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட்டதை ரத்து செய்து, அனைத்து வழக்குகளிலும் விசாரணையை முடித்து, இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையில் உள்ளஎம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மோசடியில் ஈடுபட்டதாக, போக்குவரத்து துறை ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் உள்பட 900 பேர் வரை, சம்பந்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் பெயர் கூடுதல் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, வழக்கை தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அனுமதி, ஒப்புதல் கடிதம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மோசடியில் தொடர்புடைய மற்றவர்களையும் வழக்கில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஊதிய இழப்பு
அதைத் தொடர்ந்து, 'வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குறைந்த மதிப்பெண் பெற்று, பணியில் சேர்ந்துள்ளோம் என்ற காரணத்துக்காக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளோம். பணம் கொடுத்து பணியை பெறவில்லை.
'வழக்கு விசாரணைக்கு ஒவ்வொரு முறையும் ஆஜராக, பணி விடுப்பு எடுத்து வருவதால், ஊதிய இழப்பு ஏற்படுகிறது.
'எனவே, விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, குற்றம் சாட்டப்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, 'இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் பெறும் நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த தற்போதைய நிலை என்ன என்பது குறித்து, மத்திய குற்றப்பிரிவின் விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
'குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து, விலக்கு அளிக்க முடியாது. அது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயவேல், விசாரணையை, பிப்., 2 தேதிக்கு தள்ளி வைத்தார்.