ADDED : ஜன 10, 2025 11:27 PM
சென்னை:''ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும், மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடும் முறை நடைமுறைப்படுத்தப்படும்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட, கல்வி கடன் தள்ளுபடி, 100 நாள் வேலை திட்ட நாட்கள் 150 நாட்களாக அதிகரிப்பு, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு, மாதம்தோறும் மின் பயன்பாடு கணக்கீடு, ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
அதை எப்போது நிறைவேற்றுவீர்கள்?
அமைச்சர் செந்தில் பாலாஜி: 'ஸ்மார்ட் மீட்டர்'கள் பொருத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்பணி முடிந்ததும், மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
பழனிசாமி: தமிழகத்தில் மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழகத்தில் 2.15 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகள் உள்ளன.
அதில் ஒரு கோடி வீடுகளுக்கு மின் கட்டணம் இல்லை.
பழனிசாமி: சொத்து வரி உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னர், 5.000 ரூபாய் கட்டியவர்கள். இப்போது 10,000 ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் நேரு: ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்தினால்தான், மாநகராட்சிகளுக்கான நிதியை தருவோம் என, மத்திய அரசு கூறுகிறது. வீட்டின் அளவு தவறாக கணக்கிடப்பட்ட இடங்களில், சரியான அளவு கணக்கிடப்பட்டதால் பலருக்கு சொத்து வரி உயர்ந்துள்ளது.
பல ஆண்டுகள் வரியை உயர்த்தாமல், திடீரென அதிகமாக உயர்த்தினால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதனால், ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் வரி உயர்வு தவிர்க்க முடியாதது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

