ADDED : ஜன 12, 2024 11:26 PM
சென்னை:ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, மூன்றாவது முறையாக தாக்கல் செய்த மனுவையும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக, ஆக., 12ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமின் கேட்டு, ஏற்கனவே செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமின் கேட்டு, மூன்றாவது முறையாக செந்தில் பாலாஜி சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை சார்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, ''ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனுவை நிராகரித்த தேதிக்கும், தற்போது தாக்கல் செய்த ஜாமின் மனுவுக்கு இடையில் உள்ள சூழ்நிலைகளில் எந்த மாற்றத்தையும், இந்த நீதிமன்றம் கண்டறியவில்லை.
''ஜாமின் கொடுத்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது; அவரது சகோதரர் தலைமறைவாக உள்ளார். விசாரணை அமைப்பின் மீது கூறும் குற்றச்சாட்டும் ஏற்புடையது அல்ல,'' என்று கூறி, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி மீது, வரும் 22ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.