ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு
ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு
ADDED : ஏப் 08, 2025 08:16 PM
புதுடில்லி:'உச்ச நீதிமன்றம் எனக்கு அளித்த ஜாமின் நிபந்னைகளை நான் மீறவில்லை. அரசியல் காரணங்களுக்காக, எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க, பலரிடம் லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. லஞ்சப் பணம் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
வழக்கு தொடர்பாக, 2023ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த செப்., 26ல், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, மீண்டும் அவர் அமைச்சரானார்.
இந்நிலையில், 'செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, வழக்கின் விசாரணை தடுக்கப்படும். வழக்கில் சாட்சிகளாக இருப்போரில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் என்பதால், அமைச்சருக்கு எதிராக அவர்கள் சாட்சி சொல்ல அச்சப்படுகின்றனர். எனவே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என, வித்யா குமார் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்றம் எனக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தது கிடையாது. உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமின் நிபந்தனைகளை நான் மீறவில்லை. சாட்சியங்களிடம் பேசவோ அல்லது அதை கலைக்கும் முயற்சியிலோ ஈடுபடவில்லை. அப்படி செய்தேன் என சொல்லும் மனுதாரர், அதற்கான எந்தவித ஆதாரங்களையும் வழங்கவில்லை.
எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, என் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
குறிப்பாக வழக்கில் சாட்சியாக கூட இல்லாத நபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்கக்கூடாது. அரசியல் காரணங்களுக்காக தான், இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், உச்ச நீதிமன்றம் எனக்கான கடுமையான நிபந்தனைகளை மேலும் வழங்கும் பட்சத்தில், அதை முழுமையாக ஏற்கவும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.