சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த தனி சட்டம் தேவை: கூடுதல் டி.ஜி.பி., வலியுறுத்தல்
சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த தனி சட்டம் தேவை: கூடுதல் டி.ஜி.பி., வலியுறுத்தல்
ADDED : ஏப் 14, 2025 06:17 AM

சென்னை : ''வெளிநாடுகளில் இருந்து சைபர் குற்றவாளிகளின் தரவுகளை பெற, மல்லுக்கட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த, தனி சட்டம் தேவை,'' என, சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தின் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பண மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்கு, சமூக வலைதளங்களை முக்கிய கருவியாக, சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். பெண்களின் படங்களை மார்பிங் செய்து, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தருகின்றனர்.
மல்லுக்கட்டு
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள், படங்களை பயன்படுத்தி, பண மோசடி உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பேஸ்புக், வாட்ஸாப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவையாக உள்ளன. இதனால், அந்நாடுகளில் இருந்து, சைபர் குற்றவாளிகள் குறித்த தரவுகளை, மல்லுக்கட்டி தான் பெற வேண்டிய நிலை உள்ளது.
நம் சட்ட ரீதியான கோரிக்கைகளை, அவர்கள் நிராகரித்து விடுகின்றனர். முக்கியமான தகவல்களை சரியான நேரத்தில் வழங்காமல், நீதி நிர்வாகத்தையும், விசாரணையையும் தடுக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர்.
எனவே, இந்தியாவில் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், சமூக வலைதள நிறுவனங்களின் அலட்சியம் காரணமாக பாதிக்கப்படும், ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், தனி சட்டம் இயற்ற வேண்டியது அவசியம்.
சமூக வலைதளங்கள், இந்தியாவின் அதிகார வரம்பு மற்றும் சட்டங்களுக்கு ஆட்படும் வகையில், கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும்.
சமூக வலைதளங்களை இந்திய நிறுவனங்களுடன் இணைக்க வேண்டும். அதன் தலைமை செயல் அதிகாரி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவராகவும், அவர் நம் நாட்டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
இந்த ஏற்பாடுகளை செய்வதன் வாயிலாக, சமூக வலைதளங்களை இந்தியாவின் சட்ட வரம்புக்குள் கொண்டு வர முடியும்.
கண்காணிப்பு
மேலும், சமூக வலைதள கணக்குகளின், மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட விபரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட வேண்டும்.
இதன் வாயிலாக, சமூக வலைதளங்களின் தவறான பயன்பாட்டை கண்காணிக்க முடியும். சைபர் குற்றவாளிகள் குறித்த தரவுகளை உடனுக்குடன் விசாரணை அமைப்புகள் பெற முடியும். அதன் வாயிலாக தான், மோசடிகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.