ADDED : ஜன 05, 2025 11:35 PM

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர், 23ம் தேதி இரவு, 7:45 மணியளவில், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், 37 கைது செய்யப்பட்டார்.
அவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால், ஸ்டான்லி அரசு மருத்துவனையில், கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை சம்பவத்தில், வேறு நபருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு குழு விசாரித்து வருகிறது.
இக்குழு அதிகாரிகள் நேற்று முன்தினம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சோதனை நடத்தி, சொத்து ஆவணங்கள், கத்தி மற்றும் மடிக்கணினி, கம்ப்யூட்டருக்கான ஹார்ட் டிஸ்க், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவற்றை சைபர் குற்ற ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
தங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில், ஞானசேகரனிடமும் நேற்று விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின்படி, ஞானசேகரன் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார்.