ADDED : ஏப் 03, 2025 12:15 AM
பந்தலுார்:நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டெருமைகளின் உயிருக்கு குறி வைக்கும், தமிழக - கேரள வேட்டை கும்பலால், வனத்துறைக்கு பெரும் சவாலான சூழ்நிலை உருவாகி வருகிறது.
கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள சில வேட்டை கும்பல், சுற்றுலா பயணியர் போல நீலகிரி மாவட்டத்துக்கு வந்து, உள்ளூரில் சிலருடன் கைகோர்த்து, வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவர்கள், நீலகிரி மாவட்டத்துக்குள் வருவதற்கு, கூடலுார் அருகே நாடுகாணியில் செயல்படும் வனத்துறை மற்றும் போலீஸ் சோதனை சாவடிகள், மேல்கூடலுார் வன சோதனை சாவடி அல்லது தொரப்பள்ளி சோதனை சாவடிகளை கடந்து வர வேண்டும்.
ஆனால், மாவட்டத்தின் சில இடங்களில் வேட்டைக்கு வருபவர்களை வனத்துறை கைது செய்யும் போது, அவர்களிடம், அனுமதி இல்லாத துப்பாக்கி, தோட்டாக்கள், அதிகளவில் ஆயுதங்கள் மற்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்படுகின்றன.
அப்படியெனில், மாவட்ட எல்லைகளில் சோதனை பணிகள் தீவிரமாக நடப்பதில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
இரு நாட்களுக்கு முன், எடக்காடு பகுதியில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பிடிபட்டது; மூவர் தப்பினர். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் மட்டும் கைது செய்யப்பட்டார்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு கூறியதாவது:
தற்போது, நீலகிரி மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் கேரள மாநிலம் நிலம்பூர் வன அலுவலர்கள் இணைந்து, எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதன் காரணமாக தான் சில இடங்களில் வேட்டையாடுவதற்கு முன்பே, வேட்டைக்காரர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். பொது மக்களும் இது குறித்து தகவல் தெரிவிக்க உதவினால், அவர்களின் பெயர் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

