ADDED : நவ 16, 2026 09:08 PM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே நேரலக்கோட்டை, பர்கூர் காப்புக்காடுகள், ஆந்திர மாநில வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால், அடிக்கடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருவது வழக்கம்.
நேற்று (நவ.,15) இரவு, ஆந்திர மாநில வனத்தில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை பெண் யானை, நேரலக்கோட்டை வழியாக பர்கூர் காப்புக்காட்டிற்கு வந்துள்ளது. இந்த யானை, ஜிகினிகொல்லை மாரியம்மன் கோவில் அருகே முகாமிட்டுள்ளது. இதையறிந்த வனத்துறையினர், விரட்டும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
கூட்டத்தில் இருந்து பிரிந்த பெண் யானை, பர்கூர் காப்புக்காட்டிற்கு வந்துள்ளது. அந்த யானை மீண்டும் தன் கூட்டத்தில் சென்று சேர முடியாமல் உள்ளது. இதுவரை யானையால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.
வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் பலர் வீடு திரும்புவதால், இரவில் யானை விரட்டும் பணியை மேற்கொள்கிறோம். நேரலக்கோட்டை காப்புக்காடு வழியாக ஆந்திர வனத்திற்கு ஒற்றை யானையை விரட்டி, அதன் கூட்டத்துடன் சேர்க்க முயற்சித்து வருகிறோம்.
கிராம மக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயிகள் யாரும் தங்க வேண்டாம். வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
