தமிழகத்தில் ஒரு வாரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி; சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில்
தமிழகத்தில் ஒரு வாரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி; சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில்
ADDED : அக் 24, 2025 03:45 PM

சென்னை; தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று சென்னை ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள பீஹாரில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து முடிந்தது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என்று சென்னை ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், தி.நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தான் வெறும் 137 ஓட்டுக்களில் தோற்றுவிட்டதாகவும், தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதே இதற்கு காரணம் என்றும் மனுவில் தெரிவித்து இருந்தார்.
மொத்தம் உள்ள 229 ஓட்டுச்சாவடிகளில் 100 ஓட்டுச்சாவடிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களை சரிபார்த்த போது, பல இடங்களில் இரண்டு முறை வாக்காளர்கள் பெயர்கள் இருந்தன, வெளிமாநில வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருந்ததோடு மட்டும் இல்லாமல் இறந்து போனவர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதுபற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனிடம் ஒப்படைத்த பின்னரும், அதை சரிபார்க்க அதிகாரிகள் தவறிவிட்டனர், இறந்துபோன வாக்காளர்களை பட்டியலில் ,இருந்து நீக்கவில்லை என்று கூறினார். இத்தகைய முரண்பாடுகளை அனுமதிப்பது என்பது இறுதி வாக்காளர் பட்டியலின் நேர்மையை சமரசம் செய்வதற்கு ஈடாகும் என்றும் அவர் மனுவில் தெரிவித்தார்.
எனவே, தவறான வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணிகளை சரிபார்க்க, மீண்டும் ஒரு முறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பை தேர்தல் கமிஷன் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கானது, தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான அதன் நிலைக்குழு உறுப்பினர் நிரஞ்சன் ராஜகோபால். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் ஒரு வாரத்தில் தொடங்கும் என்றும், மனுதாரரின் குறை, அதன் மூலம் தீர்க்கப்படும் என்றும் கூறினார். இதை குறித்துக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

