வார விடுமுறை நாளான இன்று சார் - பதிவாளர் அலுவலகம் உண்டு
வார விடுமுறை நாளான இன்று சார் - பதிவாளர் அலுவலகம் உண்டு
ADDED : பிப் 01, 2025 10:34 PM
சென்னை:'அசையா சொத்து குறித்து ஆவண பதிவுகளை, மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள மக்கள் விரும்புவதால், விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுகிழமை ஆவண பதிவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என, தமிழக பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டில், கடந்த டிச., 5ம் தேதி ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக, அரசுக்கு, 238 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, ஜன., 31ல், 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இரண்டாவது முறையாக, 231.51 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, ஒரு நாள் வருவாய் வசூலில், இரண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து, புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
அசையா சொத்து பதிவுகளை, மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால், விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, ஆவண பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பதிவு அலுவலகங்களை, காலை, 10:00 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இன்றைய ஆவண பதிவுகளுக்கு, விடுமுறை நாள் கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக் கிழமை பணி செய்யும் பணியாளர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும்.
மேலும், நாளை அதிகளவில் பத்திரப்பதிவு நிகழும் என்பதால், கூடுதலாக, 'டோக்கன்' ஒதுக்கீடு செய்யுமாறு, கோரிக்கைகள் வந்துஉள்ளன.
இதை ஏற்று, ஒரு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு, 100க்கு பதில், 150 டோக்கன்களும்; இரண்டு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு, 200க்கு பதில், 300 டோக்கன்களும் வழங்கப்படும்.
மேலும், அதிகளவில் ஆவணப்பதிவு நடக்கும், 100 அலுவலகங்களுக்கு, 100க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன் களும், 12 'தத்கல்' முன்பதிவு டோக்கனுடன், கூடுதலாக நான்கும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.