மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது; சிவகங்கை கார்த்தி எம்.பி., குற்றச்சாட்டு
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது; சிவகங்கை கார்த்தி எம்.பி., குற்றச்சாட்டு
ADDED : ஏப் 07, 2025 04:42 AM
அவனியாபுரம் : ''மூன்றாவது மொழியை கற்பித்தால்தான் நிதி கொடுப்போம் எனக்கூறி மத்திய பா.ஜ., அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது'' எனசிவகங்கைகாங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என்பது வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க., பொதுச்செயலாளரை பா.ஜ., டில்லிக்கு கூப்பிடுகிறது. அடுத்து பொதுச்செயலாளராக வேண்டும் என நினைப்பவரையும் கூப்பிடுகின்றனர். 'இண்டியா' கூட்டணிக்கு தமிழகத்தில் தி.மு.க., தலைமை தாங்குகிறது. அதில் காங்., தொடரும். 2026 தேர்தலில் அமோக வெற்றி பெறும். மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி., தொகுதிகள் மறுவரையறை செய்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாதிப்பு வரும். முதல்வர் ஸ்டாலின் கூறியது போல் 25 ஆண்டுகளுக்கு இதே நிலைதான் நீடிக்க வேண்டும்.
மத்திய பா.ஜ., அரசு தமிழகத்திற்கு நிதியை குறைவாகவே கொடுக்கிறது. அவர்களுக்கு சாதகமான மாநிலங்களுக்கு நிதி அதிகமாக கொடுக்கின்றனர். நமக்கு கல்வி நிதி கொடுக்கவில்லை. மூன்றாவது மொழியை கற்பித்தால்தான் நிதி கொடுப்போம் என்கின்றனர். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழக மீனவர் பிரச்னையில் இலங்கை மீனவர்களுடன் ஒப்பந்தம் கொண்டுவர ஆக்கப்பூர்வமான தீர்வை பிரதமர் ஏற்பாடு செய்ய வேண்டும். இது குறித்து அவர் வலியுறுத்தினாரா என்று தெரியவில்லை என்றார்.
காரைக்குடியில் கூறியதாவது: மத்திய அரசு வக்ப் வாரிய சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்திருப்பதாக சிலர் கூறலாம். அது சீர்திருத்தம் இல்லை சிதைத்துள்ளனர். மதத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட நன்கொடையை, எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவெடுப்பர். மற்ற மதத்தினரை அந்த டிரஸ்டில் கொண்டு போய் சேர்ப்பது அந்த மக்களை சிறுமைப்படுத்துவதாகும் என்றார்.

