சிவகிரி தம்பதி கொலை வழக்கு விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்; கைதானவர்கள் வாக்குமூலம் காரணமா?
சிவகிரி தம்பதி கொலை வழக்கு விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்; கைதானவர்கள் வாக்குமூலம் காரணமா?
ADDED : மே 27, 2025 04:56 AM

ஈரோடு : சிவகிரி தம்பதி கொலை வழக்கில், விசாரணை அதிகாரி திடீரென மாற்றப்பட்டுள்ளாார். இதற்கு, வழக்கில் கைதான குற்றவாளிகள் அளித்த அதிர்ச்சிகரமான வாக்குமூலம் தான் காரணம் என, கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வயதான தம்பதி ஏப்., 28ல் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை அதிகாரியாக, பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருந்தார். கொலை தொடர்பாக அறச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் மற்றும் நகையை உருக்கி தந்த சென்னிமலையை சேர்ந்த ஞானசேகரன் ஆகியோர், 20 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புவது தொடர்பான பணி தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து கோகுலகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டு, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஈரோடு எஸ்.பி., சுஜாதா நேற்று பிறப்பித்தார்.
இவர், உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்தவர். இதுகுறித்து, எஸ்.பி.,யிடம் கேட்டபோது, ''பெரிய வழக்கு என்பதால் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டார்,'' என்றார்.
ஆனால், போலீசார் இதை மறுக்கின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் அளித்த வாக்குமூலமே, விசாரணை அதிகாரியை மாற்றம் செய்ய வைத்துள்ளது என்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
2022ல் சென்னிமலையில் உப்பிலிபாளையம் தோட்ட வீட்டில் வசித்த வயதான தம்பதி துரைசாமி - ஜெயமணியை, ஆதாய கொலை செய்ய கும்பல் தாக்கியது. இதில், துரைசாமி கொலை செய்யப்பட்டார். ஜெயமணி தப்பினார்.
பின், 2023ல் சென்னிமலை ஒட்டன்குட்டை களியாங்காட்டு தோட்டத்தில் வசித்த முத்துசாமி - சாமியாத்தாள் தம்பதி ஆதாயத்துக்காக கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்குகளை பெருந்துறை டி.எஸ்.பி.,யாக உள்ள கோகுலகிருஷ்ணன் விசாரித்தார். இதில், பழங்குற்றவாளிகள், 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். இவ்விரு கொலைகளிலும் ஈடுபட்டது அந்த கும்பல் தான் என, தெரிவித்தார்.
ஆனால், சிவகிரி தம்பதி கொலையில் கைது செய்யப்பட்ட மூவரும், சென்னிமலையில் நடந்த இரு கொலைகளையும் தாங்கள் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனால், போலீஸ் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலையில் நடந்த இரு கொலை வழக்குகளிலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, 11 பேர் யார்? எதற்காக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலை வழக்கை சரியான பாதையில் விசாரிக்கவே, விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், சென்னிமலையில் இருவேறு இடங்களில் ஆதாய கொலை நடந்த இடங்களை, ஈரோடு எஸ்.பி., நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்க, பெருந்துறை டி.எஸ்.பி., மற்றும் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கோவை சரக டி.ஐ.ஜி., அலுவலகத்துக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேசமயம், சென்னிமலையில் இரு கொலைகளை செய்தவர்கள் குறித்து, இன்ஸ்பெக்டர்கள் குழு ஏற்கனவே பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, நான்கு நாட்களுக்கு முன் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதன் பிறகே எஸ்.பி.,யும் நேரில் சென்று விசாரித்து திரும்பியுள்ளார்.