உச்ச நேர மின் கட்டணத்தை வசூலிக்க தொழிற்சாலைகளில் 'ஸ்மார்ட் மீட்டர்'
உச்ச நேர மின் கட்டணத்தை வசூலிக்க தொழிற்சாலைகளில் 'ஸ்மார்ட் மீட்டர்'
ADDED : ஆக 22, 2025 11:33 PM
சென்னை:தாழ்வழுத்த தொழிற்சாலைகளில், உச்சநேர மின் பயன்பாட்டிற்கான, 15 சதவீத கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் பணியை, மின் வாரியம் துவக்க உள்ளது.
இதற்காக, அந்த இணைப்புகளில் பொருத்த, 25,000 'ஸ்மார்ட் மீட்டர்'கள் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த, 2022 செப்., முதல் மின் கட்டணத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியது.
அப்போது, தொழிற்சாலைகளில் உச்ச நேரமான காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரையும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.
தொழில் துறையினர் கோரிக்கையை ஏற்று, உச்ச நேர மின் கட்டண உயர்வு, 25 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக குறைக்கப்பட்டது.
பின், தாழ்வழுத்த தொழிற்சாலைக்கான உச்ச நேர மின் கட்டணத்தை, 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தும்வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது, இந்த ஆலைகளில் உச்ச நேர மின் கட்டணத்தை வசூலிக்கும் பணியை துவக்க, மின் வாரியம் தீவிரம் காட்டுகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உச்ச நேரங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய, மின்சார சந்தையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. ஒரு யூனிட் விலை, 10 ரூபாய்க்கு மேல் உள்ளது.
அந்த விலைக்கு வாங்கினாலும், ஆலைகளில் அதை விட குறைந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது.
எனவே தான், தொழிற்சாலைகளில் உச்ச நேரத்துக்கு கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தாழ்வழுத்த பிரிவில், 65,000 ஆலைகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த மீட்டர் பொருத்தப்பட்டதும், உச்ச நேர மின் கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

