இ.பி.எஸ்., தலைமையில் இன்னும் சில கட்சிகள் இணையும்: முன்னாள் அமைச்சர் வேலுமணி
இ.பி.எஸ்., தலைமையில் இன்னும் சில கட்சிகள் இணையும்: முன்னாள் அமைச்சர் வேலுமணி
ADDED : ஏப் 19, 2025 07:45 PM

கோவை : “இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., கூட்டணியில், இன்னும் சில கட்சிகள் இணையும்” என, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
கோவை மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில், நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவியர்க்கு நினைவஞ்சலி மற்றும் தி.மு.க.,வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: தி.மு.க., காங்., கூட்டணியில், குலாம் நபி ஆசாத் மத்திய அமைச்சராகவும், காந்திசெல்வன் இணையமைச்சராகவும் இருக்கும்போதுதான் நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதை மறைத்து, மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என தி.மு.க., நினைக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களிடம் இருக்கிறது என பொய் பொய்யாய் பேசி மக்களை நம்ப வைத்து, தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது. நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியவர் நளினி சிதம்பரம். அவரே, இனி யார் நினைத்தாலும் 'நீட்'டை தளர்த்த முடியாது எனக் கூறிவிட்டார். ஆனாலும் தி.மு.க., தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. சட்டசபையில் தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என ஏமாற்றுகிறது. தி.மு.க.,வின் பொய்யான வாக்குறுதியால், 22 மாணவ, மாணவியர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். ஒரு பெற்றோரும் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் 2011 முதல் 2014 வரை ஜெ.,தான் நீட் தேர்வுக்கு விலக்குப் பெற்றார். அவர் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. அதனை தி.மு.க., விரைந்து நடத்தவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது தி.மு.க., பழிபோடுகிறது, எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது.பா.ஜ.,வுடன் இ.பி.எஸ்., கூட்டணி அமைத்துள்ளார். ஆனாலும், கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பதில் உறுதியாக உள்ளார். வக்பு சட்டத்துக்கு எதிராக அ.தி.மு.க., வாக்களித்தது. தி.மு.க.,வை வீழ்த்தவே கூட்டணி.
இ.பி.எஸ்., தலைமையில் இன்னும் சில கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இணையும். நிச்சயம் 200 தொகுதிகளுக்கு மேல் வென்று, அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்கும். அப்போது நின்றுபோன அனைத்துத் திட்டங்களையும் மீண்டும் செயல்படுத்துவோம். கோவைக்கு புதிய திட்டங்கள் கொண்டு வருவோம். அ.தி.மு.க.,வின் போராட்டத்தை கபட நாடகம் என தி.மு.க., விமர்சிக்கிறது. யார் கபட நாடகம் ஆடுகிறார்கள் என மக்களுக்குத் தெரியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
அ.தி.மு.க.,வினர் கருப்புச் சட்டை அணிந்து, மெழுகுவர்த்தி ஏந்தி, ஒரு நிமிடம் மவுனமாக இருந்து, நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

