ஜாதி என்ற சுமையை இன்னும் சிலர் இறக்கி வைக்கவில்லை: ஐகோர்ட் கவலை
ஜாதி என்ற சுமையை இன்னும் சிலர் இறக்கி வைக்கவில்லை: ஐகோர்ட் கவலை
ADDED : பிப் 16, 2025 08:16 AM

சென்னை; 'அரசியல் சாசனம் வகுத்து, 75 ஆண்டுகள் கடந்தும், ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில் உள்ள ஒரு சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஆவலப்பட்டி கிராமத்தில், வரதராஜபெருமாள் மற்றும் சென்றாய பெருமாள் கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களில், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கக்கோரி, ராஜேந்திரன் என்பவர், 2015 டிச., 22ல் விண்ணப்பம் செய்தார்.இந்த விண்ணப்பத்தை உரிய காலத்துக்குள் பரிசீலித்து, ஹிந்து அறநிலைய துறையின் கோவை இணை ஆணையர் உத்தரவு பிறப்பிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அறநிலைய துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கோவிலுக்கு ஒரு திட்டத்தை வகுக்க கோரிய விண்ணப்பம் நிலுவையில் இருந்தால், அத்தகைய திட்டத்தை வகுக்க, இந்த நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால், இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை என்பது, ஜாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.
ஜாதி ஒரு சமூக தீங்கு; ஜாதியற்ற சமூகம் என்பது தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு. ஜாதியை நீடித்து, நிரந்தமாக்க செய்யும் வகையிலான வழக்கு தொடுத்த மனுதாரரின் கோரிக்கை, அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது. எனவே, மனுதாரரின் கோரிக்கை மனுவை, ஹிந்து அறநிலைய துறையின் கோவை மாவட்ட இணை ஆணையர் தள்ளு படி செய்ய வேண்டும். ஜாதியை நிலை நிறுத்துவதற்கான எதையும், எந்த நீதிமன்றமும், ஒருபோதும் பரிசீலிக்க முடியாது.
இதற்கான காரணம் மிகவும் எளிது. ஜாதி என்பது, ஒருவர் வாழ்க்கையில் என்ன கற்றுக் கொள்கிறார் அல்லது செய்கிறார் என்பதை பொறுத்து, அது தீர்மானிக்கப்படுவதில்லை; அது, பிறப்பால் ஏற்படுகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற, சமூகத்தின் அடிப்படை நெறிமுறை களுக்கு எதிராக உள்ளது.
ஜாதி, நாட்டை பல காலமாக பிளவுபடுத்தி வருகிறது. சமூகத்தை பிளவு படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை துாண்டும் ஜாதி, வளர்ச்சிக்கு எதிரானது. ஜாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது. ஜாதியில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே, அரசி யல் சாசனத்தை உருவாக்கிய தலைவர்களின் கனவாக இருந்துள்ளது.
75 ஆண்டுகள்
அரசியல் சாசனம் வகுத்து, 75 ஆண்டுகள் கடந்த நிலையில், ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில் உள்ள ஒரு சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கி வைக்காமல் உள்ளனர்.
இதனால், அரசியலமைப்பு சட்டத்தின் செயல்பாடுகளே விரக்தியடைந்து உள்ளன. ஜாதி அமைப்பு, சமூகத்தின் குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளை, சிதைக்க வழிவகுக்கிறது.
ஜாதியை நிலைநிறுத்தும் எந்தவொரு கோரிக்கையும், அரசியலமைப்புக்கு விரோதமானது மட்டுமல்ல, பொது கொள்கைக்கும் எதிரானது என்பதை, உறுதியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
அறங்காவலர் பதவிக்கு, பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மிக, அறச்சிந்தனை தான் அவசியம். இவற்றை அடிப்படையாக கொண்டு தான் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும்; ஜாதி அடிப்படையில் அல்ல.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.