சுற்றுச்சூழல் மாசு கண்காணிக்க அதிநவீன நடமாடும் ஆய்வகம் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சுற்றுச்சூழல் மாசு கண்காணிக்க அதிநவீன நடமாடும் ஆய்வகம் தங்கம் தென்னரசு அறிவிப்பு
ADDED : ஏப் 27, 2025 01:32 AM
சென்னை: ''தமிழகத்தில், 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 20 கோடி ரூபாயில், 'பசுமை பள்ளிக்கூட திட்டம்' செயல்படுத்தப்படும்,'' என, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
கடல் மட்டம் உயர்வு, கடல் அரிப்பை தடுக்க, கடலுார், துாத்துக்குடியில், 10 கோடி ரூபாயில், 'உயிர்க் கேடயங்கள்' அமைக்கப்படும்.
ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில், 5 கோடி ரூபாயில் காடுகள் வளர்த்து சீரமைக்கப்படும். ராஜபாளையத்தில், 20 ஓடைகள், 16 கோடி ரூபாயில் மறு சீரமைக்கப்படும்.
கைவிடப்பட்ட சுரங்கங்கள், சீர்குலைந்த நிலங்கள், மாசடைந்த நீர்நிலைகள், சிதைவுற்ற சூழல் அமைப்புகளை மீட்டு, சூழல் சுற்றுலா, மீன் வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
மாணவர்களிடம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 20 கோடி ரூபாயில், 'பசுமை பள்ளிக்கூடத் திட்டம்' விரிவுபடுத்தப்படும்.
சுற்றுச்சூழல் விருதுகளுக்கான பரிசுத்தொகை, முதல் பரிசு 20,000 ரூபாயிலிருந்து, 50,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசு, 15,000 ரூபாயிலிருந்து, 30,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசு 10,000 ரூபாயிலிருந்து, 20,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
கடலோர மாவட்டங்களில், 1.75 கோடி ரூபாயில், 'மீன் வலை சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி திட்டம்' செயல்படுத்தப்படும்.
சென்னை, ராமநாதபுரம், துாத்துக்குடியில், 1 கோடி ரூபாயில், பிளாஸ்டிக்கை ஒழிக்க, 'வள மீட்பு மையங்கள்' அமைக்கப்படும். தமிழக ஆறுகள், முகத்துவாரங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, 4 கோடி ரூபாயில், முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்காணிக்க, 1 கோடி ரூபாயில், அதிநவீன நடமாடும் ஆய்வகம் அமைக்கப்படும்.
சாலைகளில் வாகனங்கள் வெளியிடும் புகையை தொலைவிலிருந்து கண்காணிக்கும் முறை, 15 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும்.
மதுரை, திருச்சி, கடலுார், கோவை, திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில், 2.35 கோடி ரூபாயில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.

