ADDED : பிப் 02, 2024 12:12 AM

சென்னை:''ரயில்வே திட்டங்களுக்காக தமிழகத்திற்கு 6,331 கோடி ரூபாயும், கேரளாவுக்கு 2,744 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
டில்லியில் இருந்து காணொளி வாயிலாக, அவர் அளித்த பேட்டி:
ரயில்வேயில் பாதுகாப்பு, புதிய தொழில்நுட்பம் உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன், ரயில்வே துறைக்கு 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தற்போது, மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கு 2.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014ல் ஒரு நாளைக்கு 4 கி.மீ., வரை புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது; தற்போது 15 கி.மீ., அமைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் 5,200 கி.மீ., நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு 5,500 கி.மீ., நீளத்துக்கு புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ரயில்வே மேம்பாட்டுக்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 2,744 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, 2009 - 14ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஏழு மடங்கு அதிகம்.
தமிழகத்தில் 2009 - 14ம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு 879 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, தெற்கு ரயில்வேக்கு 12,173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6,331 கோடி ரூபாய். இது, ஏழு மடங்கு உயர்வாகும்; 700 சதவீதம் அதிகம்.
தமிழக ரயில்வேயில் மின்மயமாக்கல், 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கேரளாவில் 100 சதவீதம் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ளது.
அம்ரித் நிலையம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன; 116 நடைமேம்பாலம் கட்டப்பட்டு உள்ளன. ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில், 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும் ரயில்வே மேம்பாட்டுக்காக, 2.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கேரள - தமிழக துறைமுகங்களை இணைக்கும் வகையில், 2,100 கி.மீ., தொலைவு ரயில் பாதைகள் மேம்படுத்தப்படும்.
'வந்தே பாரத்' ரயில் தயாரிப்பை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

