கோடை விடுமுறைக்கு 50 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே முடிவு
கோடை விடுமுறைக்கு 50 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே முடிவு
ADDED : மார் 19, 2026 01:34 AM

சென்னை: கோடை விடுமுறையை ஒட்டி, 50 சிறப்பு ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது.
நடப்பு கல்வியாண்டில், பள்ளி, கல்லுாரி இறுதி தேர்வுகள், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் முடிவடைய உள்ளன. பின், கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கும், ஒரு சிலர் சுற்றுலா இடங்களுக்கும் செல்வர். வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில், டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது.
இதற்கிடையில், தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல் 23ல் நடக்க உள்ளது. இதனால், கூடுதல் ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கோடை விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. 'வந்தே பாரத்' உட்பட சில ரயில்களில் மட்டும் கணிசமாக டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. அதிகமாக காத்திருப்போர் பட்டியல் உள்ள ரயில்களின் வழித்தடத்தை தேர்வு செய்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். வாய்ப்புள்ள விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
பயணியர் தேவை கருதி, தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் செல்லும் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளோம். இரண்டு மாதங்களுக்கு, 50 சிறப்பு ரயில்கள், 200 'சர்வீஸ்'களாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

