தென் மாவட்டங்களுக்கு 'அம்ரித் பாரத்' ரயில் தெற்கு ரயில்வே பரிந்துரை
தென் மாவட்டங்களுக்கு 'அம்ரித் பாரத்' ரயில் தெற்கு ரயில்வே பரிந்துரை
ADDED : செப் 28, 2025 06:25 AM
சென்னை: 'ரயில் சேவை அதிகம் தேவைப்படும் தென் மாவட்டங்களுக்கு, 'அம்ரித் பாரத் ரயில்' சேவையை துவக்க வேண்டும்' என, ரயில்வேக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து, 'அம்ரித் பாரத்' ரயில்கள், சென்னை ஐ.சி.எப்., நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயிலுக்கு இணையான வேகம், பாதுகாப்பு கொண்ட, 'அம்ரித் பாரத்' ரயில், 'புஸ் புல்' எனப்படும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது.
இந்த ரயிலின் இருபுறமும் இன்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதால், வந்தே பாரத்துக்கு இணையாக, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும்.
ஒரே நேரத்தில் 1,834 பேர் பயணிக்கும் வகையில், 12 முன்பதிவு பெட்டிகள் உட்பட 22 எல்.எச்.பி., பெட்டிகள் இருக்கும்.
தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் ரயில், ஈரோடில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக, பீஹார் மாநிலம், ஜோக்பானிக்கு இயக்கப்படுகிறது; இதற்கு பயணியர் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சாதாரண மற்றும் நடுத்தர பயணியரை கவரும் வகையில், அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், ஈரோடு - சென்னை பெரம்பூர் - பீஹார் மாநிலம் ஜோக்பானிக்கு, சமீபத்தில் துவக்கப்பட்ட, அம்ரித் பாரத் ரயிலுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதுபோல், பயணியர் அதிகம் பயணிக்கும், எழும்பூர் - திருநெல்வேலி அல்லது நாகர்கோவில் வழித்தடத்தில், அம்ரித் பாரத் ரயில் சேவை துவக்க வேண்டும் என, வாரியத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வாரியம் ஒப்புதல் தந்த பிறகு, அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.