அதிகாரிகளின் இருக்கைகள் காலி சபாநாயகர் அப்பாவு அதிருப்தி
அதிகாரிகளின் இருக்கைகள் காலி சபாநாயகர் அப்பாவு அதிருப்தி
ADDED : ஏப் 17, 2025 12:32 AM
சென்னை:சட்டசபையில் விவாதம் நடக்கும்போது, அதிகாரிகளின் இருக்கைகள் காலியாக இருந்ததால், சபாநாயகர் அப்பாவு அதிருப்தி அடைந்தார்.
சட்டசபையில், தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, கேள்வி நேரத்திற்கு செலவிடப்படுகிறது. அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். மானிய கோரிக்கை விவாதத்திலும் பதில் அளிக்கின்றனர்.
அமைச்சர்களுக்கு உதவும் வகையில், அந்த நேரத்தில், தொடர்புடைய துறை அதிகாரிகள், சட்டசபையில் அமர்ந்திருக்க வேண்டும். அமைச்சர்களுக்கு குறிப்பெடுத்து கொடுக்க வேண்டும். ஆனால், துறை செயலர்கள், கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இருப்பது இல்லை.
இதுகுறித்து, அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தொடர்புடைய அதிகாரிகள், சட்டசபையில் உள்ள இருக்கையில் அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு நேற்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதிகாரிகள் இருக்கைகள்காலியாக இருந்தன.
இதை, கவனித்த சபாநாயகர், “விவாதம் நடக்கும்போது, அறநிலையத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலம், சமூக நலத்துறை அதிகாரிகள் இருக்க வேண்டும். அவர்கள் வந்து இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.
இதையடுத்து, அவசர அவசரமாக அதிகாரிகள் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.