UPDATED : நவ 18, 2026 05:50 PM
ADDED : நவ 18, 2026 05:50 PM
சேலம்: சபரிமலை செல்ல வசதியாக, ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் ரோடு – கொல்லம் இடையே சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும், 22 முதல் ஜன., 24 வரை ஞாயிறுதோறும் காலை, 9:20க்கு ஸ்ரீகாகுளம் ரோடில் புறப்பட்டு, பொண்டூரு, விஜயநகரம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லுார், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம் வழியே திங்கள் இரவு, 9:30 மணிக்கு கொல்லத்தை அடையும். திங்கள் காலை, 8:37க்கு சேலம் வந்து செல்லும்.
மறுமார்க்க ரயில், வரும், 24 முதல் ஜன., 26 வரை செவ்வாய்தோறும் அதிகாலை, 2:30 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு புதன் மாலை, 4:50க்கு ஸ்ரீகாகுளம் ரோடை அடையும். செவ்வாய் மதியம், 2:22க்கு சேலம் வந்து செல்லும்.
இயக்கத்தில் மாற்றம்
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பாதையில் பராமரிப்பு பணியால், செங்கோட்டை -– ஈரோடு எக்ஸ்பிரஸ் வரும், 20 அதிகாலை, 5:20க்கு புறப்பட்டு, சாவடிபாளையம் ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிந்த பின், அங்கிருந்து ஈரோடுக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
திருச்சி – ஈரோடு பயணியர் ரயில், 20ம் தேதி காலை, 7:25க்கு திருச்சியில் புறப்பட்டு, கரூரில் நிறுத்தப்படும். கரூர் – ஈரோடு இடையே ரத்து செய்யப்படும்.
ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், 20ம் தேதி மதியம், 2:00 மணிக்கு ஈரோடுக்கு பதில் மதியம், 3:05க்கு கரூரில் புறப்படும். ஈரோடு – கரூர் சேவை ரத்து செய்யப்படும்.
திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், வரும், 20, 22 மதியம், 1:00 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு கரூரில் நிறுத்தப்படும். பணி முடிந்த பின், அங்கிருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
