ADDED : நவ 10, 2026 11:03 AM
அரூர்: அரூரில் நடந்த சாலை விபத்தில், எஸ்.எஸ்.ஐ.,யின் மகன் பலியானார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேப்பம்பட்டியை சேர்ந்தவர் கமலநாதன், 55. இவர், கோட்டப்பட்டி ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருகிறார். தற்போது, அரூர் முருகர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரின் மகன் ராகவன், 18. தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, ராகவன், தன் சகோதரியான டாக்டர் ஐஸ்வர்யாவை அழைத்துக்கொண்டு, ஹெல்மெட் போடாமல் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில், அரூர் பஸ் ஸ்டாண்ட் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அரூர் வர்ணதீர்த்தம் துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு அருகே வந்தபோது, எதிரே வந்த ஒரு புல்லட், இவரது பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ராகவன், ஐஸ்வர்யா ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ராகவன் உயிரிழந்தார். ஐஸ்வர்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
