வன்னியர்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் ஸ்டாலின்: அன்புமணி குற்றச்சாட்டு
வன்னியர்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் ஸ்டாலின்: அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 22, 2025 01:06 AM

சென்னை: “வன்னியர்களை, முதல்வர் ஸ்டாலின் நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார்,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.
சென்னையில், பா.ம.க., சார்பில் நேற்று நடந்த ஆனைமுத்து நுாற்றாண்டு விழாவில், அவர் பேசியதாவது:
நாடு முழுதும் பயணித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய தலைவர்களை சந்தித்து, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு கிடைக்க பாடுபட்ட ஆனைமுத்துவுக்கு பா.ம.க., சார்பில் சிலை அமைக்கப்படும்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு சமூக நீதி குறித்த புரிதல் இல்லை; சமூக நீதி போராட்ட வரலாறும் தெரியவில்லை. அவற்றைத் தெரியப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. என் மனதில் சமூக நீதி வெறி உள்ளது. அதற்கு காரணம் என் தந்தை ராமதாஸ்.
சமூக நீதியை அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களின் மொத்த மக்கள் தொகை 7 சதவீதம்தான்.
அதிலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள், 0.5 சதவீதம் மட்டுமே. எனினும், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது.
பீஹார், கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா அரசுகளைப்போல, தமிழக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
கடந்த நான்காண்டுகளில், முதல்வர் ஸ்டாலினை ஐந்து முறை சந்தித்து, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தினேன். நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால், இப்போது மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் வழங்க முடியும் என்கிறார். ஸ்டாலின், நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார்; 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு பேசினார்.