ADDED : அக் 14, 2025 04:50 AM

மதுரை : ''கருணாநிதி பெயரை சூட்டி, பாராட்டு விழா நடத்துவது தான், தி.மு.க., அரசின் சாதனை,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பா.ஜ., சார்பில் 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' என்ற பிரசார பயணம், நேற்று முன்தினம் மதுரையில் துவங்கியது. துவக்க விழாவில், மத்திய அமைச்சர் முருகன், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார் பங்கேற்றனர்.
த.மா.கா., தலைவர் வாசன், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலர் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
பா.ஜ., தலைவர் நாகேந்திரன் மேற்கொள்ளும் பிரசார பயண பாடலை, முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். குறும்படத்தை மத்திய அமைச்சர் முருகன் வெளியிட்டார்.
பின்னர், அண்ணாமலை பேசியதாவது:
'எங்களை தொடக்கூட முடியாது; மீண்டும் ஆட்சிக்கு வருவோம்' என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெறலாம்; 1,000 ரூபாய் கொடுப்பதால், பெண்கள் ஓட்டு கிடைக்கும் என்ற இறுமாப்பில் தான் அவர் இப்படி கூறுகிறார்.
தி.மு.க., ஆட்சியில், அந்த கட்சி நிர்வாகிகளின் தங்கை, தாய்க்கு கூட பாதுகாப்பில்லை. கரூர் துயர சம்பவத்தில், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது.
ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி, இறுதிச்சடங்குக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு கொடுக்கின்றனர்.
ஆட்சிக்கு வந்தபோது வேட்டி கட்டிய ஸ்டாலின், தற்போது பேன்ட் அணிகிறார். புட்பால் விளையாடிய முதல்வரின் பேரன் இன்பநிதி, சினிமாவில் நடிக்கிறார். துணை முதல்வர் உதயநிதி நாயுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார்.
நோயாளிகளை, 'மருத்துவ பயனாளர்கள்' என சொல்ல சொல்கின்றனர். ஆனால், மதுவிலக்கு துறை அமைச்சரை சாராயத்துறை அமைச்சர் என்று சொன்னால் கோபம் வருகிறது.
தன் பெயரிலேயே திட்டங்கள் அறிவிப்பது; கருணாநிதி பெயரில் பாலம், சாலை, பாராட்டு விழா நடத்துவது; இதுதான் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசின் சாதனை.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற இருமல் மருந்தால், வட மாநிலங்களில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உடனே, மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயல்படவில்லை என சொன்ன ஸ்டாலின், தமிழக அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கிறார். நான்காண்டுகளாக தமிழகத்தில் ஆய்வு நடத்தவில்லை என்பது தான் உண்மை நிலவரம்.
ஆய்வுக் கூட்டங்களையே நடத்தாத முதல்வர் ஸ்டாலின் தான் இதற்கு காரணம். ஆட்சி நடத்த தெரியாத பொம்மை முதல்வராக இருக்கிறார். வரும் 2026 தேர்தல், ஆட்சி மாற்றத்திற்கான அரிய வாய்ப்பு. இந்த ஆட்சியை துாக்கி எறிந்து, மீண்டும் பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.
இளைஞர்கள் சினிமாவிற்கு போங்கள்; விசில் அடியுங்கள். ஆனால், சினிமாவில் நடிப்பவர்கள்நன்றாக ஆட்சியை தருவர் என நம்ப வேண்டாம். மதுரை மண்ணில் துவங்கிய இந்த யாத்திரை, வெற்றியை தரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.