ஸ்டாலினை மக்கள் ஒருபோதும 'அப்பா' என அழைக்க போவது இல்லை: ராஜு
ஸ்டாலினை மக்கள் ஒருபோதும 'அப்பா' என அழைக்க போவது இல்லை: ராஜு
ADDED : பிப் 19, 2025 06:32 PM
துாத்துக்குடி:முதல்வர் ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் அப்பா என அழைக்கப்போது இல்லை என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், தமிழகத்தை கட்டி போட்ட வரலாறு உண்டு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 'அம்மா' என்று எல்லோரும் அன்புடன் அழைத்தனர். அது இயற்கையாக அமைந்த ஒன்று. ஆனால் முதல்வர் ஸ்டாலினை, தமிழக மக்கள் ஒருபோதும் 'அப்பா' என்று சொல்லப் போவதில்லை.
எப்போதும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., தரப்பு நிறைவேற்றியது கிடையாது. நிறைவேற்ற முடியாது என தெரிந்தும், மக்களை ஏமாற்றுவதற்காக அவர்கள் வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், அ.தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 'தாலிக்கு தங்கம்' திட்டத்தை, தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது. கடந்த 2011ல் நடந்த ஆட்சி மாற்றம், 2026லும் நிச்சயம் வரும். அதற்கு இன்னும் பத்து மாதங்களே உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

