திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : பிப் 19, 2025 12:37 AM

சென்னை:திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் கட்டப்பட உள்ள, டைடல் பூங்காக்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பில், 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன், புதிய டைடல் பூங்கா.
12,000 பேர்
மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணியில், 314 கோடி ரூபாய் மதிப்பில், 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும், 12 தளங்களுடன், புதிய டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், 12,000 பேர் பணிபுரியும் வகையில், ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு, குளிர்சாதன வசதிகள் மற்றும் நவீன வசதிகளுடன், டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன.
இவற்றால், திருச்சி, மதுரை மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த, படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர்.
இந்த மாவட்டங்களின் சமூக, பொருளாதார நிலையும் மேம்படும். இந்த டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, மகேஷ், ராஜா, தலைமைச் செயலர் முருகானந்தம், தொழில்துறை செயலர் அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பூங்கா மேலாண் இயக்குநர் சந்தீப் நந்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலகத்தரம்
இரண்டு டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது குறித்து, அமைச்சர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப புரட்சி, சென்னையை தாண்டி, தமிழகம் முழுதும் விரிவடைகிறது.
மதுரை, திருச்சி டைடல் பார்க் மற்றும் மினி டைடல் பார்க் வாயிலாக, இரண்டாம் நகரங்களுக்கு, ஐ.டி., வளர்ச்சியை அரசு எடுத்துச் செல்கிறது.
மாநிலம் முழுதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்ற அரசின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுகிறது.
கருணாநிதி, சென்னையில் முதல் டைடல் பார்க்கை கொண்டு வந்து, சென்னையை ஐ.டி., மையமாக மாற்றியது போல, புதிய டைடல் பார்க்குகள், திருச்சி, மதுரையையும் மாற்றும். சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும். வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறாமல், உலகத்தரம் வாய்ந்த வாய்ப்புகளை அணுக முடியும் என்பதை உறுதி செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

