கூட்டாட்சியை வலுப்படுத்தும் கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
கூட்டாட்சியை வலுப்படுத்தும் கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
UPDATED : ஆக 30, 2025 10:41 AM
ADDED : ஆக 30, 2025 06:08 AM
சென்னை: 'மத்திய - மாநில அதிகாரங்களில், கூட்டாட்சியை வலுப்படுத்தும் கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் தேவை' என, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: மத்திய - மாநில அரசுகள் முரண்படாமல், ஒன்றையொன்று சார்ந்து, ஒவ்வொன்றும் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், மத்திய கொள்கைகள் அதிகார சமநிலையை மத்திய அரசுக்கு சாதகமாக, படிப் படியாக சாய்த்துள்ளன. வழிகாட்டுதல் மத்திய அரசில் உள்ள பெரிய அமைச்சகங்கள், மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிடுகின்றன.
நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப் படுகின்றன. மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு, ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், கட்டாய ஒப்புதல்கள் கோரப்படுகின்றன. மத்திய - மாநில அதிகாரங்களில் கூட்டாட்சியை வலுப்படுத்தும், எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் தேவை.
விரிவான பதில் இந்த நோக்கத்தின் அடிப்படையில், மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலை குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துக்களை பெறுவதற்கு, ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ளது. இதனை https://hlcusr.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும், உயர் நிலைக் குழுவின் வினாத்தாளை ஆராய்ந்து, விரிவான பதில்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.